சென்னை: 'மீண்டும் பணி வழங்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட ஆவின் ஊழியர்கள் முடிவெடுத்துள்ளனர்.
விதிகளை மீறி ஆவினின் பணி நியமனம் செய்யப்பட்ட, 206 பேர், ஜன., 4ல், பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட திருப்பூர், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள், உயர்நீதிமன்றத்தை அணுகி, மீண்டும் பணியில் சேர அனுமதி பெற்றனர்; பணியிலும் சேர்ந்தனர்.
மீதமுள்ளோரும் படிப்படியாக அனுமதி பெற்று வருகின்றனர். ஆனால், இவர்களை பணியில் சேர விடாமல், அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள், நேற்று முன்தினம், சென்னையில் உள்ள ஆவின் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகளை சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை. வரும், 13ம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த, அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.