ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. இந்த பகுதிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்த பகுதியில் உணவுக்கு என்று எப்போதும் தனி அடையாளம் உள்ளது.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உணவு வகைகளில் ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம் இப்போது. ஆம் கீழக்கரை தொதல் அல்வா மிகவும் பிரபலமானது. ராமநாதபுரம், ராமேஸ்வரம் வழியாகச் செல்லும் பெரும்பாலானோர் இதைச் சுவைக்க மறப்பது இல்லை. இப்படிப்பட்ட சுவையான கீழக்கரை தொதல் அல்வாவை வீட்டிலேயே செய்வது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1கோப்பை
தேங்காய் - 5
சர்க்கரை - 1கிலோ
பனை வெல்லம் - 250கிராம்
ஜவ்வரிசி (அ) பாசிப்பருப்பு- 4ஸ்பூன்
ஏலக்காய் - தேவையான அளவு
செய்முறை
பச்சரிசியை ஊற வைத்து இடித்துச் சலித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பெரிய இரும்பு சட்டியை வைத்து சூடானதும், அதில் பச்சரிசி மாவு, 6 கிளாஸ் தேங்காய்ப் பால், சர்க்கரை, பனைவெல்லம், ஜவ்வரிசி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.
பின்னர் 2கிளாஸ் தேங்காய்ப் பாலை மீண்டும் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளற வேண்டும். அடுத்து ஏலக்காய் பொடியைத் தூவ வேண்டும். தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பை துருவி மேலே தூவலாம்.
அல்வா பதத்தில் கையில் ஒட்டாத அளவிற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறிய பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறினால் சுவையான கீழக்கரை தொதல் தயார்.