சென்னை சென்னையில் 'ஸ்பாஞ்ச் பார்க்' பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், பள்ளி கட்டடங்கள் உள்ளிட்ட 42 பணிகள் மேற்கொள்ள 98.59 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், முறைகேடுகளை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் தலைமையில், சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் 'சிங்கார சென்னை 2.0' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள, கடந்தாண்டு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, 11 பூங்காக்கள், இரண்டு விளையாட்டு திடல்கள், 10 'ஸ்பாஞ்ச்' பூங்காக்கள், இரண்டு மயானபூமிகள், 16 பள்ளி கட்டடங்கள் மற்றும் புரதான சின்னமான விக்டோரியா பொது கூடத்தை புனரமைத்தல் என, 42 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 98.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
பூங்கா: சிறந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
கூழாங்கற்களுடன் கூடிய எட்டு வடிவிலான பாதை, யோக செய்யுமிடம், அமரும் இருக்கைகள், கிரில் மற்றும் புதுமையான ஓவியங்கள், கழிப்பறைகளுடன் கூடிய பாதுகாப்பு அறை அமைக்கப்படும்.
விளையாட்டு திடல்கள்: கால்பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் உள்ளிட்ட இளைஞர்கள் மேம்பாட்டிற்காக, பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படும்.
ஸ்பாஞ்ச் பார்க்: செயற்கை குளம் மற்றும் மழைத்தோட்டங்களுடன் 'ஸ்பாஞ்ச் பார்க்' அமைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, மழைநீரை நிலத்தில் உறுஞ்ச செய்து, நிலத்தடி நீரை சேமிக்கப்படும்.
மயானபூமி: எல்.பி.ஜி., தகன மேடையாகவும், அடிப்படை வசதிகளுடன், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், நினைவுக்கூடங்கள், தியான அறைகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் அமையும்.
பள்ளி கட்டடம்: சிறந்த கற்றல் மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும்.
விக்டோரியா பொது மண்டபம்: விக்டோரிய பொது மண்டபம் புதுப்பிக்கப்பட்டு, தரைதளம் சுழல் கண்காட்சி அருங்காட்சியமாக மாற்றப்பட உள்ளது.
மூன்று பக்க காட்சியகங்கள், பார்வைக்கூடம், ஒரு அரைவட்ட காட்சியகம் அமையும். மேலும், தேநீர் கூடம், ஓய்வு அறை, முக்கிய பிரமுகர்களுக்கான கூடம் உள்ளிட்ட பல்நோக்கு பயன்பாட்டிற்கான வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
இப்பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., மற்றும் ஆளுங்கட்சியனர் தலையீட்டை தடுக்கவும், ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில், சிறப்பு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் தலைமையில், நிதித்துறை கூடுதல் தலைமை செயலர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குனர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மேலாண் இயக்குனர், இக்குழுவின் தொடர்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தில் மாநகரை அழகுபடுத்தும் வகையில், வண்ண ஓவியங்கள் வரைதல், சாலையில் பூச்செடிகள் அமைத்தல், மேம்பாலங்களில் கார்டன் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால், அவற்றை முறையாக பராமரிக்காததால், அவை அனைத்தும் பயனற்று உள்ளன.தற்போது, அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு குழு, அப்பணிகளையும் ஆய்வு செய்து, மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆங்கில வார்த்தையான 'ஸ்பாஞ்ச்' என்பதற்கு பஞ்சு என்று பொருள். பஞ்சு எப்படி தண்ணீரை உறிஞ்சுமோ, அதேபோல், மழைக் காலங்களில் தண்ணீரை உறிஞ்சும் வகையில் இந்த பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. ஸ்பாஞ்ச் பூங்காவுக்கு அமைக்கப்படும் தொட்டியில் கூழாங்கற்கள், மணல் கொண்ட அடுக்குகள் இருக்கும். அதன் மத்தியில் இயற்கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்படும். இதனால், அதிகளவில் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும், வெள்ள நீர் விரைந்து வடிவதற்கும் இந்த 'ஸ்பாஞ்ச் பார்க்' உதவும்.கட்டடங்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் பெய்யும் மழை நீரை தேங்கவிடாமல் சேகரித்து, சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் எப்போதும் குளிர்ச்சியான சூழலைத் தரும் ஸ்பாஞ்ச் பூங்கா, கோடைக்காலங்களில் மக்கள் இளைப்பாறுவதற்கு பயன்படும்.