ராமநாதபுரம் நகராட்சி மற்றும் அருகில் சக்கரகோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதிகளில் பல ஊரணிகள் கோயில் அருகில் உள்ளன.இவற்றில் தேங்கும் தண்ணீரை மக்கள் குளிக்க பயன்படுத்துகின்றனர். ஊரணிகள் நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளன.
இந்நிலையில் இவற்றை பல மாதங்களாக பராமரிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தண்ணீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள்வளர்ந்து மழை நீர் முழுமையாக சேகரிக்க முடியாத நிலை உள்ளது.
ராமநாதபுரம் நகரில் மதுரை மெயின்ரோடு கூரிசாத்த அய்யனார் கோயில் அருகே உள்ள ஊரணியில் படித்துறை சேதமடைந்துஉள்ளது. கழிவுநீர் கலந்து செப்டிக் டாங்க் குளமாக மாறி கொசுக்கள் உற்பத்தி கூடாரமாகி உள்ளது.
இதே போல விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பெயர்பெற்ற நொச்சியூரணியில் பிரம்ம புரீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்கள் குளத்தில் குளிக்க வருகின்றனர். இங்கும் ஊரணியில் கழிவுநீர் கலப்பதோடு, குப்பை குவிந்துள்ளது. சுகாதாரக்கேட்டால் விழா காலங்களில் அபிேஷக தீர்த்த நீராக பயன்படுத்த முடியவில்லை, என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை பக்தர்கள் விஜயன், மகேந்திரன் கூறுகையில், எங்கள் குலதெய்வமான கூரிசாத்த அய்யனார் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு முகூர்த்த நாட்கள், சிவராத்திரி விழா காலங்களில் அதிக பக்தர்கள் கோயிலில் தங்குகின்றனர். இவர்கள் அருகில் உள்ள ஊரணியில் குளித்தும், கை, கால்களை கழுவியும் வந்தனர்.
விழாக்காலங்களில் அபிேஷகத்திற்கு நீரும் எடுத்தனர். தற்போது ஊரணியில் கழிவுநீர் கலக்கிறது, படித்துறை சேதமடைந்துள்ளது. அபிேஷகத்திற்கு ஊரணி நீரை பயன்படுத்துவது இல்லை. அருகே நொச்சியூரணிக்கு செல்கின்றனர்.அங்கும் தற்போது தண்ணீர் மாசுபட்டுள்ளது.
எனவே அதிகாரிகள் குறைந்தபட்சம் கோயில் அருகே உள்ள ஊரணிகளில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து, புதிதாக படித்துறை அமைத்து தர வேண்டும், என்றனர்.