சென்னை :விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகளை பாதுகாப்பாக வைக்க, புதிதாக கட்டப்பட்ட 106 சேமிப்பு கிடங்குகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். இதனால், தஞ்சாவூர் உட்பட எட்டு மாவட்டங்களில், நெல்மணிகள் மழையில் நனையும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, 130 கோடி கிலோ கொள்ளளவில், 260 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அவற்றில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
தொடர் கதை
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியையும், நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது.
இதற்காக, நெல் விளைச்சல் உள்ள மாவட்டங்களில், நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. தற்போது, வாணிப கழகத்தின் சொந்த கட்டடங்களில், 575 நிரந்தர நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இது தவிர, சீசன் காலத்தில், 2,000க்கும் மேற்பட்ட தற்காலிக நிலையங்கள் துவக்கப்படுகின்றன. நேரடி கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லை. இதனால், நிலையங்களுக்கு வெளியில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன. அவை, மழையின் போது நனைந்து பாழாகின்றன.
குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவது தொடர் கதையாகிறது. அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் நிலையங்களில் வாங்க மறுக்கின்றனர்.
முடிவு
எனவே, நெல்லை பாதுகாக்கக் கோரி, விவசாயிகள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மழையில் நனைந்த நெல் மூட்டைகள் தொடர்பாக, நம் நாளிதழில் பல முறை புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து, மழை, புயலின் போது நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க, புதிய தொழில்நுட்பத்தில், 'செமி குடோன்' எனப்படும் சேமிப்பு கிடங்குகளை அமைக்க, வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.அந்த கிடங்குகளில் சுவர்களுக்கு பதில், 'ஷட்டர்' போன்று கதவுகள் பொருத்தப்படும். அவற்றை தேவைக்கு ஏற்ப திறந்து மூடலாம். இதனால், நெல் மூட்டை களுக்கு தேவையான வெப்பமும், காற்றும் கிடைக்கும்.
அரசாணை
நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க, 10 மாவட்டங்களில், 18 இடங்களில், 28.63 கோடி கிலோ கொள்ளளவு உடைய சேமிப்பு கிடங்குகளை, 238 கோடி ரூபாய் செலவில் அமைக்க, அரசாணை வெளியிடப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, துாத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில், 105.08 கோடி ரூபாயில் 14.24 கோடி கிலோ கொள்ளளவுடன் கூடிய, 106 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
அவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார். இது தவிர, 54 கோடி ரூபாய் செலவில், 12 புதிய கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் பிரபாகர்; நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, மதிவேந்தன், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் கலந்து கொண்டனர்.
'சப்ளை'
புதிதாக அமைக்கப்பட உள்ள 12 கிடங்குகளுக்கு, சிவகங்கை மாவட்டம் - காளையார்கோவில், சிங்கம்புணரி; அரியலுார் - அரியலுார், ஆண்டிமடம்; வேலுார் - அணைக்கட்டு, பேரணாம்பட்டு; திண்டுக்கல் - குஜிலியம்பாறை, திண்டுக்கல் மேற்கு; திருச்சி - மருங்காபுரி; நாமக்கல் - கொல்லிமலை, சேலம் - மேட்டூர்; திருவண்ணாமலை - போளூர் ஆகிய பகுதிகளில் இடம் தேர்வாகிஉள்ளது.
இதன் வாயிலாக, ரேஷன் உணவுப் பொருட்களை பாதுகாப்பாக, அந்தந்த தாலுகா உள்ளேயே சேமித்து வைத்து, தாமதம் இல்லாமல் 'சப்ளை' செய்யலாம்.