நரிக்குடி,-நரிக்குடி அருகே தாமிரபரணி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. சப்ளை பாதிக்கும் என்பதால் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
நரிக்குடி வறட்சியான பகுதி. எங்கு பார்த்தாலும் சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. நீர் நிலைகள் சரி வர சீரமைக்காததால் தொடர் மழை பெய்தும் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, அப்பகுதியில் பெரும்பாலும் உப்பு தண்ணீராக உள்ளது.
ஆழ்துளை அமைத்தாலும் சுவையான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்நிலையில் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மற்ற மாவட்டங்களிலிருந்து கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம்தான் சப்ளை செய்யப் பட்டு வருகிறது. அதனடிப்படையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு சப்ளை செய்யப் படுகிறது.
இதனால் இப்பகுதி மக்களுக்கு நல்ல சுவையான குடிநீர் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று அ.முக்குளம்- --- அழகாபுரி இடையே கால்வாய் தோண்டும் போது தாமிரபரணி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் சப்ளை பாதிக்கும் சூழ்நிலை உள்ளதால், உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.