திருத்தணி, திருத்தணி ஒன்றியம், பாபிரெட்டிப்பள்ளி கிராமத்தில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில், 35க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர், இந்நிலையில், பள்ளி வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் ஓடுகளால் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் முறையாக பராமரிக்காததால் சேதம் அடைந்தது.
இந்நிலையில், 2007 - -08ம் ஆண்டு அதே வளாகத்தில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டி மாணவர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
தற்போது மாணவர்கள் அந்த பள்ளி கட்டடத்தில் படித்து வருகின்றனர். இருப்பினும் பழுதடைந்த ஓடுகளால் ஆன பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்றப்படாமல் உள்ளனர்.
மாணவர்கள் உணவு இடைவேளையின் போது அங்கு சென்று விளையாடுகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் செடிகள் வளர்ந்தும்,பழுது அடைந்த குடிநீர் தொட்டியும் உள்ளது.
இதனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு பழுதடைந்த கட்டடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.