திருப்பூர்:திருப்பூர் மாவட்ட அளவில் நேற்று நடந்த லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்வில், மொத்தம் 2,248 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூபாய் 53.63 கோடிக்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நேற்று பல்வேறு வழக்குகளில் இரு தரப்பும் சமரசம் ஏற்படுத்தும் விதமாக 'லோக் அதாலத்' என்னும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில், மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், 10 அமர்வுகள்; அவிநாசி, காங்கயம், பல்லடம் பகுதிகளில் தலா இரு அமர்வுகள்; தாராபுரத்தில் 3 மற்றும் உடுமலையில் 4 அமர்வுகளாகவும் மொத்தம் 23 அமர்வுகளில் விசாரணை நடந்தது.
மாவட்ட கோர்ட் வளாகத்தில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு கோர்ட் நீதிபதி ஸ்ரீகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில், மாவட்டத்தில் மொத்தம் 9,350 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில், திருப்பூரில் 4,320 வழக்குகளில், 2,248 வழக்குகளில் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
விபத்து இழப்பீடு வழக்குகள், 671 வழக்குகளில், 41.61 கோடி ரூபாய்க்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 234 சிவில் வழக்குகளில், 9.35 கோடி ரூபாய்; செக் மோசடி வழக்குகள், 32ல், 1.77 கோடி ரூபாய்; சிறு குற்ற வழக்குகள், 1,225ல், 27 லட்சம் ரூபாய்; வங்கி வராக்கடன் வழக்குகள் 76ல் மொத்தம், 61 லட்சம் ரூபாய்; நுகர்வோர் வழக்கில் 1.20 லட்சம் ரூபாய் என ஏறத்தாழ 53.63 கோடி ரூபாய்க்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட நீதிபதிகள் சுகந்தி, பத்மா, நீதிபதிகள், புகேழந்தி, மேகலா மைதிலி, செல்லத்துரை, ஆதியான் மற்றும் மாஜிஸ்திரேட்கள் கலந்து கொண்டனர்.
பல்லடம் கம்மாளப்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சண்முகம், 42. கடந்த 2017ம் ஆண்டு, பல்லடம் அருகே பைக்கில் சென்ற அவர் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் பலியானார். இந்த சம்பவத்தில் இப்கோ-டோக்கியோ இன்சூரன்ஸ் நிறுவனம், விபத்தில் பலியான சண்முகத்தின் குடும்பத்தாருக்கு 72 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.
இழப்பீட்டுக்கான காசோலையை இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் வக்கீல் பூங்கொடி, பிரபாகரன் ஆகியோர் நீதிபதிகள் முன்னிலையில் வழங்கினர்.