சென்னை,-'சஸ்பெண்ட்' உத்தரவைரத்து செய்ய, 2 லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளருக்கு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பொது பணித் துறையில் உதவி பொறியாளராகப் பணிபுரிந்தவர் ராஜகோபால். இவர், சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையில், பார்க்கிங் கட்டண வசூல் தொகையை, அரசு கணக்கில் செலுத்தாமல், முறைகேடு செய்ததாக, 2010 மார்ச், 18ல், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய உதவுவதாகவும், அதற்கு, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறு, மருத்துவ பணிகள் துறை உதவி செயற்பொறியாளர் ஜெயபால் மோகன், 64, என்பவர், ராஜகோபாலை அணுகினார். இது, 2014 ஆக., 28ல் நடந்தது.
இதுகுறித்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில், ராஜகோபால் புகார் அளித்தார். விசாரணைக்கு பின், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, ஜெயபால் மோகன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் முன் நடந்தது. போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
மனுதாரர் மீதான குற்றச்சாட்டு, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனினும், அவரின் வயது, குடும்ப சூழல், குற்றத் தன்மை ஆகியவற்றை, இந்நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.
எனவே, குற்றம் சாட்டப்பட்ட ஜெயபால் மோகனுக்கு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.