திருக்கனுார் : லிங்காரெட்டிப்பாளையம் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர் திருவிழா நடந்தது.
மண்ணாடிப்பட்டு தொகுதி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளியில், உலக நீர் நாள் தினத்தை முன்னிட்டு,புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டி மற்றும்தேசிய மனிதவள அறக்கட்டளை சார்பில் தண்ணீர் திருவிழா நடந்தது.
விழாவில், பள்ளி தலைமையாசிரியர் சிவகங்கை மற்றும் மாணவர்கள், அக்னி வித்யாலயா பள்ளியில் இருந்து வந்த நீர்குடத்தினை வரவேற்று பெற்றுக் கொண்டனர்.
தேசிய மனித வளஅறக்கட்டளை அமைப்பின் தலைவர் ரவிவர்மன், விளையாட்டு பிரிவு இயக்குனர் மோகன்தாஸ் ஆகியோர் நீரின் முக்கியத்துவத்தையும், தற்போது உள்ள நீர்நிலைகளின் ஆதாரத்தையும் மாணவர்களுக்கு விளக்கினர்.
நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் நீர் வளத்தை காக்க வேண்டி உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
பின்னர்,பள்ளிக்கு வந்த நீர்குடத்தினை மாணவர்கள் எடுத்துச் சென்று, ஊரின் அருகில் இருந்த குளத்தில் ஊற்றினர்.
ஓவிய ஆசிரியர் பாலச்சந்தர் மேற்பார்வையில், துணி சுவரொட்டியில் பாண்கோஸ் பள்ளி மாணவர்கள் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓவியங்களை வரைந்து வாசகங்களை எழுதினர்.
ஆசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் விஜய், ஆசிரியர்கள் சேகர், சிவபெருமாள் செய்திருந்தனர்.