தாம்பரம் : மேற்கு தாம்பரம், கன்னடபாளையத்தைச் சேர்ந்த பிரியா என்பவரின் மகன் கோகுல்ஸ்ரீ, 17, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சிக்னல் பேட்டரி ரிலே பாக்ஸ் திருடியதாக புகார் வந்தது.
தாம்பரம் ரயில்வே போலீசார், கடந்த டிச., 30ம் தேதி அவரை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில்
அடைத்தனர்.
இந்நிலையில், அங்கிருந்த காவலர்கள் தாக்கியதில் டிச., 31ம் தேதி சிறுவன் உயிரிழந்தான்.
இந்த வழக்கில், சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், சிறுவனின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய், சமூக பாதுகாப்பு துறை இழப்பீடு நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் என, மொத்தம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், குடியிருக்க வீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், சிறுவனின் தாய் பிரியாவிடம், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்பு வீடு ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றை வழங்கினார்.