மாமல்லபுரம், : மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம், முக்கிய சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ளது.
சுற்றுலாப் பகுதி என்பதால், அலுவலக முகப்பு பகுதி, அழகிய சுதை சிற்பங்களுடன், கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை கடந்து செல்லும், வெளியூர் பயணியர், அலுவலக அழகை கண்டு ரசிக்கின்றனர்.
இதை உணராத அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர், அலுவலகத்தை மறைத்து, பொதுக்கூட்டம், நிகழ்ச்சி என நடத்துகின்றனர். பிரமாண்ட பதாகை அமைத்து மறைக்கின்றனர்.
இது குறித்து, நம் நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, பேரூராட்சி மன்ற கடந்த மாத கூட்டத்தில், இந்த அவலக பகுதிக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சி நிர்வாகம், அனைத்து அரசியல் கட்சியினருக்கும், இதுகுறித்து அறிவிப்பு கடிதம் அளித்து, ஒத்துழைக்க அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, பதாகை அமைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.