திண்டிவனம், : புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கூரியர் வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்திய டிரைவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 478 மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யின் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சத்தியானந்தன் தலைமையிலான போலீசார், நேற்று காலை புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ், சென்னை சர்வீஸ் ரோட்டில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற (பிஒய்.01.பிவி.3639) என்ற பதிவெண் கொண்ட கூரியர் சர்வீஸ் டாடா ஏஸ் வாகனத்தை மடக்கி, சோதனை செய்தனர்.
அதில், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு 478 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.
டிரைவர் உட்பட இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், டாடா ஏஸ் டிரைவர் புதுச்சேரி திலகர் நகர் செந்தில்குமார், 47, அவருடன் மதுபாட்டில்கள் வாங்கி வந்தவர், புதுச்சேரி குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த அருளானந்து, 50; என தெரிய வந்தது.
போலீசாருக்கு சந்தேகம் வராத வகையில், வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில், 'பிரதோஷ வழிபாட்டுக்குழு' என ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் விசேஷத்திற்கு மது பாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.
அதையடுத்து டிரைவர் உட்பட இருவரையும் போலீசார் கைது செய்தனர். ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து, திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.