திட்டக்குடி, : திட்டக்குடி அருகே, ஐம்பொன்னாலான நடராஜர் சாமி சிலையை விற்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லமுத்து மகன் ராமர்,33. இவர் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சாமி சிலையை விற்க முயற்சிப்பதாக, கடலூர் மாவட்ட எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எஸ்.பி.,உத்தரவின் பேரில், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு மற்றும் தனிப்படை எஸ்.ஐ., நடராஜன் ஆகியோர் நேற்று, ராமரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் சந்தேகப்படும்படியாக இருந்த மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியைச் சேர்ந்த சரவணன்,35; கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்கிற சந்துரு,33; காஞ்சிராங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி,42; ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஒன்றரை வருடத்திற்கு முன்பு இரண்டு அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் சாமி சிலையை கொடுத்து, சிலையின் மதிப்பு ரூ.8 கோடி என்றும், சிலையை விற்றுக் கொடுத்தால் ஒரு பங்கு தருவதாக கூறியதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, ராமர் வீட்டின் அருகே குப்பைமேட்டில் பதுக்கி வைத்திருந்த நடராஜர் சிலையை போலீசார் மீட்டனர்.
ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து, ராமர் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள முன்னாள் பா.ம.க., ஒன்றிய செயலாளர் வேல்முருகனை தேடி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட சிலை எந்தக் கோவிலுக்கு சொந்தமானது என்பது விசாரணைக்கு பிறகு தெரியும். கடத்தலில் தொடர்புடைய மற்றவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.