வானுார் : ஆரோவில் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன், 32; கிருஷ்ணமூர்த்தி மகன் ஞானமணி, 26; இருவரும் சென்டரிங் தொழிலாளி.
இருவரும் திண்டிவனம் பகுதியில் நேற்று வேலையை முடித்து விட்டு, இரவு 8;30 மணிக்கு, புதுச்சேரி நோக்கி பைபாஸ் சாலை வழியாக ஹீரோ ஹோண்டா பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
பைக்கை மணிகண்டன் ஓட்டினார். மொரட்டாண்டி டோல்கேட் அருகே வந்தபோது, புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது, எதிர்பாராத விதமாக பைக் லாரியின் பின்னால் மோதியது. இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஞானமணி, பலத்த காயமடைந்தார்.
அவரை ஆரோவில் போலீசார் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.