சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிட்டு அரசாணை பிறப்பித்த விவகாரத்தில், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் விசாரணை நடத்தவும், போலீஸ் எஸ்.பி.,யை பணி நீக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் தாக்கல் செய்த மனு:
கடந்த, 2019ல் பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவியர், பெண்களை பாலியல் வன்முறை செய்து, 'வீடியோ' எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில், 9 பேர்தான் அடையாளம் காணப்பட்டனர். வழக்கை முழுமையாக விசாரிக்கவில்லை.
எஸ்.பி.,யாக இருந்த பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை கசிய விட்டார்.
வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர், கல்லுாரி விபரங்களை வேண்டுமென்றே குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் பெயரும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் குறுக்கீட்டாலும், பெயர்களை வெளியிட்டதாலும், பாதிக்கப்பட்ட மேலும் பலர் புகார் அளிக்க முன்வரவில்லை. பெயர்களை வெளியிட்டதால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை கசிய விட்ட போலீஸ் அதிகாரி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யவும், அரசாணையில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட்டது ஏன் என, முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் விசாரணை நடத்தவும் கோரி, முதல்வரின் முகவரி துறை மற்றும் டி.ஜி.பி.,க்கு 2012 ஜனவரியில் மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. என் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.