கோவை : கோவையில் இந்திய இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் சங்க மாநாடு (ஐஏஜிஇஎஸ்) இன்று நிறைவு பெறுகிறது.
கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், 'இந்திய இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 20வது தேசிய மாநாடு' நடந்து வருகிறது.
துவக்க விழாவில், சங்கத்தின் தலைவர் டாக்டர் தங்கவேலு பேசுகையில், சர்வதேச அளவில், மக்களுக்கு ஏற்படும் புதிய வகை குடல் நோய், அறுவை சிகிச்சையின் நேரடி ஒளிபரப்பு, மாநாட்டில் இடம் பெற்றுள்ளது. இளம் தலைமுறை டாக்டர்களுக்கு, இம்மாநாடு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பும் கிடைத்துள்ளது,'' என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் கங்காதர் பேசுகையில், இது போன்ற மாநாடுகள் இங்கு நடப்பது, கோவையின் மருத்துவ வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. தொழில் வளர்ச்சிக்கு அடுத்தபடியாக, மருத்துவ வளர்ச்சியும் கோவையில் ஏற்பட வேண்டும், என்றார்.
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் வரவேற்றார். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.
இரண்டு நாள் மாநாட்டில், ஈஷா அமைப்பின் தலைவர் சத்குரு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.