பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நாடுகாணி சோதனை சாவடி வழியாக, வெடிமருந்து பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நாடுகாணி சோதனை சாவடியில், தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், பெள்ளி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளாவிலிருந்து கூடலூர் சென்ற, கேரளா மாநில அரசு பஸ்சில், தடை செய்யப்பட்ட வெடிமருந்து பொருட்கள் கடத்தி வருவதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து 10 ஜெலட்டின் மற்றும் டெட்டனட்டனர்களை பறிமுதல் செய்த போலீசார், கூடலூர் அருகே ஆரோட்டுபாறையை சேர்ந்த கோயா 47 என்பவரை கைது செய்து விசாரணை மேற்க் கொண்டனர்.
அதில் தனது வீடு கட்டும் இடத்தில் உள்ள பாறைகளை உடைப்பதற்காக கேரளாவிலிருந்து வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். நாடுகாணி, தேவாலா சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட தங்க சுரங்கங்களில், பாறைகளை உடைப்பதற்காக இதுபோன்ற வெடிமருந்து பொருட்கள் கடத்தி வரும் நிலையில், கூடலூர் பகுதிக்கும் வெடிமருந்து பொருட்கள் கடத்தி வருவது குறித்து, தொடர் விசாரணை மேற்க் கொள்ளப்படும் என்றும், இப்பகுதி மாநில எல்லையாக உள்ளதாலும், நக்சல்கள் நடமாட்டம் உள்ளதாலும் வெடிமருந்து பொருட்கள் கடத்துவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.