வேலுார்: வேலுார் அருகே, பா.ம.க., பிரமுகரை கொலை செய்த தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் அருகே சித்தேரியை சேர்ந்தவர் பிரகாஷ், 26. கட்டட மேஸ்திரி. இவர் பா.ம.க., வில் வேலுார் மண்டல செயலாளராக இருந்தார். பெரியார் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 45. இவர் அங்கு டிஜிட்டல் போர்டு கடை வைத்துள்ளார். இவர் அரியூர் தி.மு.க., கிளை செயலாளாக இருக்கிறார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு சித்தேரியில் நடந்த கோவில் திருவிழாவில் அன்னதானம் வழங்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதமாக மாறியது. இந்நிலையில், நேற்று (பிப்.,11) இரவு தொரப்பாடியிலிருந்து சித்தேரிக்கு பைக்கில் பிரகாஷ் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரியார்நகர் கடையிலிருந்த ராமகிருஷ்ணன் சாலையை கடக்க முயன்றார். பைக்கில் சென்ற பிரகாஷ் அவர் மீது மோதினார். ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் கட்டையால் தாக்கியதில், சம்பவம் நடந்த இடத்திலேயே பிரகாஷ் இறந்தார்.
பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் உத்தரவுபடி கொலையாளிளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இறையன் காடு பகுதியில் பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை போலீசார் இன்று(பிப்.,12) கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.