வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராமேஸ்வரம் :-அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடக் கூடாது,
உண்டியலில் மட்டும் தான் போட வேண்டும் என ராமேஸ்வரம் கோயில் அதிகாரிகள்
பக்தர்களை மிரட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி
கோயிலுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தீபாராதனை
காட்டும் அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடுவது அவர்களின் வழக்கம். தற்போது
ஆரத்தி தட்டில் காணிக்கை போடாதீர்கள். உண்டியலில் மட்டுமே போட வேண்டும் என
கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் சன்னதிகளில் நின்று பக்தர்களிடம்
வற்புறுத்துகின்றனர்.
சுவாமிக்கு கொடுக்கும் காணிக்கை
எஸ்.சங்கரவாத்தியார்மாநில செயலாளர்தமிழ்நாடு பிராமணர் சங்கம்:
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததும் முதலில் காணிக்கையை அர்ச்சகர் தட்டில் போடுவது வழக்கம். அவர்களுக்கு கொடுக்கும் காணிக்கையை சுவாமிக்கு கொடுப்பதாக எண்ணி மன திருப்தி அடைகின்றனர். தட்டில் உள்ள காணிக்கையை எடுத்து உண்டியலில் போட சொல்வது பக்தர்கள் திருப்தியை தட்டி பறிப்பது போல் உள்ளது.
வியாபாரி போல் கூவி அழைக்கிறார்கள்
வி.ராகவேந்திரன் சர்மா, ராமேஸ்வரம் புரோகிதர்கள் சங்க தலைவர்:
எந்த அர்ச்சகரும் பக்தர்களை கட்டாயப்படுத்தி காணிக்கை கேட்பதோ அல்லது உண்டியலில் போடுவதை தடுத்து நிறுத்துவதோ இல்லை. ஆனால் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் 'காணிக்கையை உண்டியலில் போடுங்கள்...., போடுங்கள்....' என கூறுவது வாடிக்கையாளரை வியாபாரி கூவி கூவி அழைப்பது போல் உள்ளது.

நீதிமன்றம் செல்வோம்
கே.ராமமூர்த்திமாவட்ட தலைவர், ஹிந்து முன்னணி, ராமநாதபுரம்:
தமிழக கோயில்களில் அர்ச்சர்கள் தட்டில் காணிக்கை போடக்கூடாது என எந்த உத்தரவும் இல்லை. ஆனால் ராமேஸ்வரம் கோயிலில் நடக்கும் அதிகாரிகளின் இந்த அடாவடி செயல் கண்டனத்திற்குரியது.ஆன்மிக மரபு, கலாசாரத்தை சீர்குலைக்குப்பதையே முக்கிய நோக்கமாக இந்த அரசு கொண்டுள்ளது. இந்த செயலை தடுக்க சட்டரீதியாக நீதிமன்றத்தில் முறையிடுவோம்.
செல்வந்தராக வாழவில்லை
ஏ.சரவணன்தென் மண்டல அமைப்பாளர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்:
தற்போது ராமேஸ்வரம் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் என யாரும் செல்வந்தராக வாழவில்லை. அர்ச்சகர்களுக்கு குறைந்த சம்பளமே அரசு தருகிறது. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையே அவர்களின் குடும்ப தேவையை பூர்த்தி செய்கிறது. அர்ச்சகர்கள் தட்டில் போடும் காணிக்கையால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட போவதில்லை. உண்டியல் வருவாயை பெருக்கி அரசிடம் நற்பெயர் வாங்க இங்குள்ள அதிகாரிகள் கங்கணம் கட்டி செயல்படுகின்றனர்.