அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
அ.தி.மு.க., ஆட்சியில், சிறப்பாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் தான், ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கும், பல்வேறு துறைகள் சார்பில், மத்திய அரசால், முதன்மை மாநிலத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே, தி.மு.க., அரசும், அந்த விருதுகளைப் பெற்றது. அந்த விருதுகள், 22 மாத தி.மு.க., ஆட்சியின் செயல்பாட்டுக்காக அல்ல. முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைக்காக, அது தொடர்கிறது.

இப்ப என்ன சொல்ல வர்றாரு... 'மாப்பிள்ளை அவங்க தான்... ஆனா, அவங்க போட்டிருக்கிற சட்டை எங்களுடையது'ன்னு உரிமை கொண்டாடுறாரோ?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை:
குடியரசு தினத்தன்று, அதிக சாராயம் விற்றவர்களுக்கு, சான்றிதழ்அளித்து புளகாங்கிதம்அடைந்த தி.மு.க., அரசு, குறைவாக சாராயம் விற்றவர்களிடம், அதற்கான விளக்கத்தை கேட்பது வெட்கக்கேடானது. இந்த அரசு, குடி கொடுத்து குடியை கெடுக்கும் அரசு என்பதை உறுதி செய்கிறது.

'பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற, பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!
இந்திய கம்யூ., கட்சியின் தேசிய பொதுச் செயலர் ராஜா பேட்டி:
தேர்தலில், இடதுசாரி கட்சிகளுக்கு வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், அரசியல், கொள்கை நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கிறோம். அதனால் தான், பிரதமர் மோடி, 'கம்யூனிசம் என்பது ஒரு அபாயமான சித்தாந்தம்' என்று சொல்கிறார். 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் புரிதலோடு, மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பது தான், இடதுசாரிகளின் நிலைப்பாடு.
பிரதமர் மோடி கேட்ட மாதிரியே, கேரளாவுல நீங்களும், காங்கிரசும் முதலில் ஒன்றுபட முடியுமா என பாருங்க... அப்புறமா, மத்தவங்களுக்கு பாக்கு, வெத்தலை வைக்கலாம்!
அ.தி.மு.க., அமைப்பு செயலர் ஆதிராஜாராம் பேச்சு:
ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிப்பதில், முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். அன்று, ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி இல்லை என, சட்டசபையில் எம்.ஜி.ஆர்.,முழங்கினார். நீதிமன்றம்அனுமதித்தும், ஜெயலலிதா தடை விதித்தார். பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்தும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொள்கையில் இருந்து தடம் மாறாமல், தடை விதித்தவர் பழனிசாமி. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதியில், சிறுபான்மையினர்ஓட்டுகளை சுளையாக பெற்று, தென்னரசு வெற்றி பெறுவது உறுதி.
இப்படி, ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக ஆவேசமா முழங்கினா, இவங்க கூட்டணி கட்சியான பா.ஜ.,வினர் ஓட்டுகளே விழாம போயிடுமே... பரவாயில்லையா?