வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'அதானி விகாரத்தில் பா.ஜ., பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை; மறைப்பதற்கு எதுவும் இல்லாததால் அச்சம் ஏதும் இல்லை' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: அதானி விகாரத்தில் பா.ஜ., பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மறைப்பதற்கு எதுவும் இல்லாததால் அச்சம் ஏதும் இல்லை. பார்லிமென்டில் பலரது பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ராகுலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது ஒன்றும் முதன்முறையல்ல. 2024 தேர்தலில் பா.ஜ.,வுக்கு போட்டியில்லை, மக்களின் முழு ஆதரவும் பிரதமர் மோடிக்கு உள்ளது.
பெகாசஸ்
பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியபோது, ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள் எனக் கூறியிருந்தேன். அப்படியிருந்தும் அவர்கள் ஏன் நீதிமன்றம் செல்லவில்லை. பிரச்னைகளை உருவாக்க மட்டுமே அவர்களுக்கு தெரியும்.

வடகிழக்கு மாநிலங்கள்
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, முழு வடகிழக்கு மாநிலங்களையும் மாற்ற நாங்கள் பல விஷயங்களை செய்துள்ளோம். முதலாவது விஷயம் இன்று வடகிழக்கில் அமைதி நிலவுகின்றது. இன்று சாலைகள் அமைக்கப்பட்டு, ரயில்வே, நெட்வொர்க் என அனைத்தும் சென்றடைகின்றன.
ஜி-20
இந்தியாவில் ஜி20 மாநாடு தொடர்பாக 32 இடங்களில் 200க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த விதத்தை, உலகம் நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கிறது.
நாங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளோம். இந்த பெரிய நாட்டில் ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் கூட விட்டு வைக்கப்படவில்லை. இது ஒரு பெரிய சாதனை.
பி.எப்.ஐ
நாடு முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) வெற்றிகரமாக தடை செய்யப்பட்டுள்ளது. இது நாட்டில் மதவெறியை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பு என்று நம்புகிறேன். அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன. நாங்கள் ஓட்டு வங்கி அரசியலுக்கும் அப்பாற்பட்டு பி.எப்.ஐ.,யை தடை செய்துள்ளோம்.

ஜம்மு-காஷ்மீர்
2019ம் ஆண்டில் பா.ஜ., தலைமையிலான அரசால் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி நடந்து வருகிறது, பயங்கரவாதம் படிப்படியாக முடிவுக்கு வருகிறது. இடதுசாரி பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
கர்நாடகா
கர்நாடகாவில் பா.ஜ., முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 மாதங்களில், நான் 5 முறை அங்கு சென்றுள்ளேன். மாநில மக்களின் நாடித் துடிப்பில் பிரதமர் மோடியின் புகழை உணர்ந்தேன். கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு அதிகளவு ஓட்டுகள் கிடைக்கும். பிபிசி ஆவணப்படம் போன்ற ஆயிரம் சதிகள் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் மோடி இன்னும் வலுவாகவும் பிரபலமாகவும் வருகிறார்.
திரிபுரா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது 12 மணிக்குள்ளாகவே பா.ஜ., பெரும்பான்மையை தாண்டிவிடும் என நம்புகிறோம். அடுத்து நடக்கவுள்ள ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தல்களிலும் பா.ஜ., வெற்றிப்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.