புதுச்சேரி: புதுச்சேரியில் திறந்தவெளியில் பேனர், கட் அவுட் வைப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆனால், சட்ட விரோதமாக பேனர், கட் அவுட் வைப்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

சிக்னல்களிலும், சாலைகளிலும் தாறுமாறாக வைக்கப்படும் பேனர்களால் நகரம் அலங்கோலமாக காட்சியளிப்பதுடன், அனைவரும் முகம் சுளிக்கின்றனர். பேனர், கட் அவுட்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறடிக்கப்படுவதால் விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது. பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.
சட்டத்தை மதிப்பதில் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும் சட்டத்தை மீறி பேனர், கட் அவுட் வைக்கின்றனர். மேலும், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தும், வரவேற்றும், சாதனைகளை பட்டியலிட்டும் அவர்களது ஆதரவாளர்கள் பேனர் வைக்கின்றனர்.
கட்சிகளின் தலைமையும் தங்களது கட்சியினரை கண்டிப்பதில்லை. சில அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் இன்னும் ஒருபடி மேலே சென்று, பேனர், கட் அவுட்களை அகற்றுவதற்காக செல்லும் அதிகாரிகளுக்கு போன் செய்து அகற்ற வேண்டாம் என கூறுகின்றனர். மேலும், சமூக விரோதிகள் பலராலும் அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். இதனால், அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டு விடுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், பேனர் கலாசாரத்தின் அடுத்தக்கட்டமாக, மின் கம்பங்களில் பேனர் கட்டுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதாவது, ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், கடை விளம்பரங்கள், வீடு விற்பனை மற்றும் வாடகை விளம்பரங்கள், வேலைவாய்ப்பு விளம்பரங்கள் என சகட்டுமேனிக்கு மின் கம்பங்களில் பேனர்களை கட்டி தொங்க விடுகின்றனர்.

இதற்காக, மின் துறையில் எந்த அனுமதியும் பெறுவதில்லை. ஏற்கனவே மின் கம்பங்களில் கேபிள் ஒயர்களை தாறுமாறாக கட்டி வைத்துள்ளனர். இதனால், மின் கம்பங்கள் சிலந்தி கூடுகளாக காட்சியளிப்பதுடன், காற்று வீசும்போது மின் கம்பத்தை அசைத்து பலம் இழக்க செய்து விடுகின்றன. இவற்றுடன் பேனர்களும் தாறுமாறாக கட்டப்படுவதால் மின் கம்பங்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது.
மேலும், மின் கம்பங்களில் தாறுமாறாக கட்டப்பட்டுள்ள பேனர்கள் பல இடங்களில் காற்றில் ஊசலாடி கொண்டுள்ளன. இவை நடந்து செல்லும் மக்கள் மீதோ, சைக்கிள், டூ வீலர்களில் செல்லும் பொதுமக்கள் மீதோ விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னையில் காற்றில் பறந்து வந்த பேனர் விழுந்ததில், டூ வீலரில் சென்ற இளம் பெண் பரிதாபமாக இறந்தார். அதுபோன்ற துயர சம்பவம் புதுச்சேரியில் நடப்பதற்கு முன், மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.