இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி:
பா.ஜ.,வின் கொத்தடிமையிலும் கொத்தடிமையாக, அ.தி.மு.க.,வும், பழனிசாமியும் உள்ளனர். வேட்பாளரை கூட பா.ஜ.,வை கேட்டுத்தான் முடிவு செய்து அறிவிக்கும் நிலையில் அவர் இருக்கிறார்; அப்படிப்பட்டவர் எங்களை பற்றி விமர்சிக்க உரிமை இல்லை.
காங்., வேட்பாளர் இளங்கோவனையே, தி.மு.க., தலைவர் தானே முடிவு செஞ்சாரு... அது, 'காம்ரேட்'கள் கண்ணுக்கு தெரியலையா?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:

நகைக்கடையில் கொள்ளை, நான்கு ஏ.டி.எம்.,களில் கொள்ளை, காவல் நிலையத்தில் விவசாயி தற்கொலை, கோவை நீதிமன்ற வளாகத்தில் கொலை போன்ற செய்திகள், தமிழக காவல் துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்குகின்றன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே, இச்சம்பவங்கள் காட்டுகின்றன. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தி.மு.க., அரசு என்ன செய்யப் போகிறது?
எதிர்க்கட்சியா இருந்தப்ப, 'சட்டம் - ஒழுங்கு சரியில்லை'ன்னு சதா குற்றம் சொன்னவங்களுக்கு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின், நிர்வாகத்தை சரியா நடத்துறது எவ்வளவு கஷ்டம்னு இப்ப புரிஞ்சிருக்குமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:

கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும், 'ஜல் ஜீவன்' திட்டத்திற்கு, மத்திய அரசு ஒதுக்கிய, 4,015 கோடி ரூபாயில், 873 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. திட்ட செலவுக்கான மாநில அரசு பங்கு தொகையை வழங்காததே இதற்கு காரணம். பெரும் நிதி செலவில், கடலில் பேனா சிலை அமைப்பதற்கு பதில், இதுபோன்ற பயனுள்ள காரியங்களுக்கு நிதியை செலவிடலாமே!
தவிச்ச வாய்க்கு தண்ணி எப்ப வேணும்னாலும் குடுத்துக்கலாம்... கருணாநிதிக்கு பேனா சிலை இப்ப வச்சா தானே உண்டு!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி பேட்டி:
கோவையில், பட்டப்பகலில், பொது வெளியில் நடந்த படுகொலை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதற வைக்கின்றன. சட்டம் - ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில், நாளொன்றுக்கு எட்டு முதல் பத்து கொலைகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. மக்களை பாதுகாக்க, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை, தி.மு.க., அரசு மேற்கொள்ள வேண்டும்.
'எங்க ஆட்சியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூட யாரும் துப்பாக்கி பயன்படுத்துவது இல்ல'ன்னு, தி.மு.க.,வினர் அடிச்சு பேசுவாங்களே!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி:

இலங்கை ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்து பேரழிவை சந்தித்த பின், 15 ஆண்டுகள் பதுங்கி இருக்க மாட்டார் பிரபாகரன். சொல்லிவிட்டு வருபவர் அல்ல பிரபாகரன்... வந்து விட்டு தான்சொல்வார்.
ஒருவேளை பிரபாகரன் உயிரோடு வந்தால், சீமான் அவருடன் ஆமைக்கறி சாப்பிட்டாரா என்ற கேள்விக்கு விடை கிடைச்சிடும்!