லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர்' பகுதி துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:
தனியார் பில்டிங்கில் தனி அரசாங்கம் பணம் கை மாறுனா, பட்டா கை மாறும்
திருவள்ளூர் மாவட்டம் கோனூரில் இடம் வாங்கினேன். பத்திரப்பதிவெல்லாம் முடிந்தது. பட்டாவுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தேன். பொன்னேரி தாலுகா அலுவலகத்தில், நில அளவைத்துறைக்கு உரிய ஆவணங்களுடன் சென்று பட்டா குறித்து கேட்டால், யாரும் பதில் சொல்லவில்லை. யாரைக்கேட்டாலும் வி.ஏ.ஓ.,வை போய் பாருங்கள் என, ஒரு தனியார் பில்டிங்கை கை காட்டினார்கள். அந்த தனியார் பில்டிங்கில், வி.ஏ.ஓ.,வுக்கு என, தனியாக நிரந்தர அறை ஒன்றை ஒதுக்கியிருக்கின்றனர். அங்கு சென்று பார்த்ததும், நாளை ஆபீசுக்கு ஐந்தாயிரத்துடன் வந்து விடுங்கள் என்றார் வி.ஏ.ஓ.,
ஏற்கெனவே சொத்துமதிப்பு சான்றிதழுக்காக, பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் பட்டபாடும், அதன் நடைமுறையும் தெரியும். வயதாகி விட்டதால் ஒவ்வொரு முறையும் அலைய முடியாது என்பதால், வேறு வழியின்றி பணத்துடன், கோனுார் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு (இது அதிகாரப்பூர்வமான அலுவலகம்) சென்றேன்.
கையில் ரூ. 3,500ஐ கொடுத்ததும் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டு, அனுப்பிவிட்டார். அடுத்த நாளே ஆன்லைனில் பட்டா அப்ரூவல் செய்யப்பட்டு விட்டது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள். இங்கோ, அரசாங்கத்துக்குப் போட்டியாக தனியாக ஒரு ராஜாங்கம் நடத்தி, பணமின்றி எதுவும் நடக்காது என இருக்கிறார்கள்.
தொடரும்...