வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லியில், வெவ்வேறு ரத்த வகைகள் உள்ள கணவன் - மனைவி இடையேயான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, 12 மணி நேர போராட்டத்துக்குப் பின் வெற்றிகரமாக முடிந்தது.
பீஹாரைச் சேர்ந்த ஷிவா, 29, என்பவருக்கு, சமீபத்தில் கல்லீரல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்ற இவரது குடும்பத்தினர், இறுதியாக புதுடில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் இவரை சேர்த்தனர்.
இங்கு, ஷிவாவின் உடல்நிலை மோசமானதை அடுத்து, உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். ஷிவாவுக்கு உறவினர்கள் பலரின் கல்லீரல் பொருந்தாத நிலையில், அவருடைய மனைவி பார்வதி, தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தர முன்வந்தார். ஆனால், இருவரின் ரத்த வகைகள் வெவ்வேறாக இருந்ததால், அறுவை சிகிச்சையில் தடங்கல் ஏற்பட்டது.
இது குறித்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் நைமீஷ் மேத்தா கூறியதாவது: ஷிவாவின் ரத்த வகை 'பி பாசிட்டிவ்' ஆக இருக்க, பார்வதியின் ரத்த வகை 'ஏ பாசிட்டிவ்' ஆக இருந்தது. கல்லீரல் பொருந்தி வந்தாலும், ரத்த வகை பொருந்தாத நிலையில், இரண்டு ரத்த வகைகளையும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினோம்.
பி பாசிட்டிவ் ரத்த வகைக்கு ஒத்துப் போகும் எதிர் அணுக்களின் அளவை உகந்த நிலைக்கு வரவைத்து, பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பெரும் சவாலாக இருந்த இந்த அறுவை சிகிச்சையில் 21 டாக்டர்கள், 12 மணி நேரம் பங்கேற்று வெற்றிகரமாக முடித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.