வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்திய ஜனநாயகம் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்வதேச முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ் திடீரென கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. சோரசின் அமைப்புகள் மற்றும் நிறுவனத்துடன், காங்கிரசுக்கு உள்ள தொடர்பு குறித்த தகவல்களும், வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த, சர்வதேச அளவில் சதி நடப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பார்லிமென்டிலும் கடும் அமளி நிலவுகிறது.
புதிய தகவல்
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், சர்வதேச முதலீட்டாளருமான ஜார்ஜ் சோரஸ், 92, இந்த விவகாரத்தை வைத்து, பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். 'ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்துள்ளது குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க மறுக்கிறார். அவர் ஒரு ஜனநாயகவாதி அல்ல. இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். அதானி குழுமத்தின் வீழ்ச்சியால் இந்தியாவில் ஜனநாயகம் வெல்லும்' என, ஜார்ஜ் சோரஸ் கூறினார்.
இதற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'ஜார்ஜ் சோரஸ் பேசியுள்ளது, பிரதமருக்கு எதிரானது மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் ஆகும். தன் பேச்சின் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக அவர் போர் தொடுத்துள்ளார்.'இந்திய ஜனநாயகத்தை சீர்குலைத்து, தங்களுக்கு இணக்கமான நபர்கள் வாயிலாக இந்த அரசை நடத்த வேண்டும் என ஜார்ஜ் விரும்புகிறார்' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஜார்ஜ் சோரஸ் நடத்தும் 'ஓப்பன் சொசைட்டி ஜஸ்டிஸ் இனிஷியேட்டிவ்' எனப்படும் அரசு சாரா அமைப்பு, உலகெங்கும் சமூக நீதி, ஜனநாயக நடைமுறை குறித்த ஆய்வுகளை நடத்தி வருகிறது.
சர்ச்சை
இந்த அமைப்பில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ருத் சிங் முக்கியப் பொறுப்பில் உள்ளார். பல நாடுகளில் உள்ள சமூக நீதி, மனித உரிமை நிலவரம் தொடர்பாக இவர் பல ஆய்வுகளை செய்துள்ளார். இவை பெரும்பாலும் சர்ச்சையில் முடிந்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் உறவினரான போரி நேருவும், ஜார்ஜ் சோரசும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் யூத மதத்தினர் என்பது இவர்களை இணைக்கும் முக்கிய புள்ளியாகும். அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதற்கும், ஜார்ஜ் போரஸ் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கும், நம் நாட்டுக்குமான செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், நம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், வெளிநாடுகளில் இருந்து சதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, பி.பி.சி., நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படமும் இதில் அடங்கும். கடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில் உள்ள சில பிரச்னைகள் தொடர்பாக, வெளிநாடுகளில் இருந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சமூக வலைதளங்களில் நம் நாட்டுக்கு எதிராக பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் லோக்சபா தேர்தலுக்கு முன், 'டூல் கிட்' எனப்படும் சமூக வலைதள தகவல்கள் தொகுப்புகள் வாயிலாக நம் நாட்டுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பொய் பிரசாரங்கள் அதிகளவில் வெளியிட சதி நடப்பதாக கூறப்படுகிறது.இதன் வாயிலாக ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான், இவர்களுடைய நோக்கமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஒரு பானை சோற்றின் ஒரு பதம் தான், ஜார்ஜ் சோரஸ் தற்போது கூறியுள்ள கருத்து என்று, உளவு அமைப்புகள் திரட்டியுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:ஜார்ஜ் சோரஸ் வயதானவர், பெரும் பணக்காரர், அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து மற்ற நாடுகளைப் பற்றி தன் கருத்தை கூறுபவர். தன்னுடைய கருத்தால் உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று நினைப்பவர்.ஆனால், இதையெல்லாம்விட, அவர் மிகவும் ஆபத்தானவர்.சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படுவதாக அவர் கூறினார். இது போன்ற கருத்து எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் உணர வேண்டும். இது போன்ற கருத்து, சமூகத்தில் பெரும் தாக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.அதுபோலவே, தற்போது நம் நாட்டின் ஜனநாயகம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். உலகமயமாக்கல் என்பது அனைவருக்கும் வாய்ப்பு தரப்படுவதற்காகவே. ஆனால், ஒரு நாட்டின் ஸ்திரதன்மையை, அமைதியை, ஒற்றுமையை சீர்குலைக்கும் தீய நோக்கத்துடன் கூறப்படும் கருத்துக்களை ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
- புதுடில்லி நிருபர் -