வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: ''ஆன்மிகத்தில் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதற்கு, முதல்வர் முயற்சி எடுக்கிறார். இது, ஆன்மிக புரட்சியை ஏற்படுத்துகிற அரசு,'' என, அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
சிவராத்திரியில், இரவு முழுவதும் கண் விழித்து, தீமைகள் அகன்று நன்மைகள் கிடைக்க வேண்டி சிவனை வழிபடுகின்றனர். பேரூர் பட்டீஸ்வரர் கோவில், நெல்லையப்பர் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் கோவில் மற்றும் கபாலீஸ்வரர் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது. அதேபோல், அறநிலையத்துறையின் கீழ் உள்ள 330 கோவில்களில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
மக்களுக்கான பணி செய்வது மட்டுமே எங்கள் நோக்கம். இந்த குறுகிய காலத்திற்குள் 500 திருக்கோவில்களில் குடமுழுக்கு விழா நடந்துள்ளது. பழநி கோவில் கும்பாபிஷேக விழா, வசைபாடுகிறவர்கள் கூட வாழ்த்தும் அளவுக்கு நடந்தது. சுமார் 1,000 கோடி செலவில், 1,500 கோவில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் சுமார், 12 ஆயிரத்து 597 கோவில்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாக வைப்பு நிதி வழங்கி, 129.5 கோடி ஒதுக்கீடு செய்தது இந்த அரசுதான்.

சுமார் 2 ஆயிரம் திருக்கோவில்களுக்கு, ஒரு கோவிலுக்கு, 2 லட்சம் ரூபாய் என்று வைப்பு நிதி ஒதுக்கி, 40 கோடி ரூபாய் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களுக்கு திருப்பணிகளை மேற்கொள்வதற்கு, 100 கோடி ரூபாய் அரசு சார்பில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
கன்னியகுமாரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் தேவஸ்தானங்களுக்கு 3 கோடி ரூபாய் மானியம், கிராமப்புறம் மற்றும் ஆதிதிராவிடர்கள் வசிக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிக்கென 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆன்மிகவாதிகள், இறையன்பர்கள், கோவில்கள் என, அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதற்கு முயற்சி செய்கிற முதல்வர் என்பதால் தான், இந்த அரசு ஆன்மிக புரட்சியை ஏற்படுத்துகின்ற அரசு என, ஹிந்து சமய அறநிலையத்துறை சொல்கின்றது.
இவ்வாறு, அவர் கூறினார்.