வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், அரசு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் இறையன்பு, சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக பிராட்வே, திருவான்மியூர், அடையாறு, திருமங்கலம், வடபழநி, கிண்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் பேருந்து நிலையங்கள் உள்ளன. இந்த பேருந்து நிலையங்களை மாநகர போக்குவரத்து கழகத்தினர் பராமரித்து வருகின்றனர்.
தொடர்கதை
அதேநேரம், பயணியருக்கு போதிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது. குறிப்பாக, அமரும் இடம், கழிப்பறை, குடிநீர் வசதி, சுகாதாரமான இடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட, பல பேருந்து நிலையங்களில் இல்லை. இதனால் பல ஆண்டுகளாக பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், மழைக்காலங்களில், சென்னையின் வர்த்தக மையமான தி.நகர் உள்ளிட்ட பிரதான பேருந்து நிலையங்கள், குளம்போல மாறி பயணியர் அவதிப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில், சாலைகள், தெருக்களில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்பட்டிருந்தாலும், மாநகர போக்குவரத்துக் கழக பகுதியில், அப்பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதற்கு, அரசு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆலோசனை
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன், தலைமைச் செயலர் இறையன்பு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை மேம்படுத்துவது, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை துாய்மையாக பராமரிப்பது மற்றும் கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்துவது தொடர்பாக, முதன் முறையாக தலைமைச் செயலர் தலைமையில், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்கள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் உள்ள பேருந்து நிலையங்களில் மழைக் காலங்களில் நீர் தேங்காமல் தடுக்க ஆலோசிக்கப்பட்டது.
இதற்காக, தலைமைச் செயலர் தலைமையில், சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உயர் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது.
அதன்படி, மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால், பேருந்து நிலையங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பேருந்து நிலையங்களில் தரைத்தள வடிவமைப்பிலும் சில மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தவிர, கழிப்பறை வசதிகள், அமரும் இடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்தவும் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இத்துடன், இடவசதி உள்ள பேருந்து நிலையங்களை, எல்.இ.டி., திரையுடன், சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் பணிகள் விரைந்து துவக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.