வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : கூட்டுறவு வங்கிகளில் முதன்முறையாக நடப்பு நிதியாண்டில், நேற்று முன்தினம் வரை, 15.59 லட்சம் பேருக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில், பயிர் கடன்களை வழங்குகின்றன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடனை அடைத்து விட்டால், வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
நடப்பு 2022 - 23ம் நிதியாண்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பயிர் கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, புதிய உறுப்பினர்களை அதிகம் சேர்த்து, தகுதியான அனைவருக்கும் விரைந்து கடன் வழங்க உத்தரவிடப்பட்டது.
![]()
|
கடந்த 2021 - 22ல் 14.48 லட்சம் பேருக்கு, 10 ஆயிரத்து 292 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டன. முதல் முறையாக இந்த நிதியாண்டில், நேற்று முன்தினம் வரை, 15.59 லட்சம் பேருக்கு, 12 ஆயிரத்து 10 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மட்டும், 2.65 லட்சம் பேருக்கு 1,709 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர ஆடு, மாடு, கோழி, வளர்ப்பு உள்ளிட்ட கால்நடை பிரிவு கடனில், 2.48 லட்சம் பேருக்கு 1,130 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிதியாண்டில், 2.68 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு, 1,486 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.