வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு: அத்துமீறல் அதிகமாக இருந்தால், இடைத்தேர்தலை நடப்பது ஒத்தி வைக்கக்கூடும் என்பதால், இரு நாட்களாக, தி.மு.க., மற்றும் கூட்டணியினர் அடக்கி வாசிக்க துவக்கியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், 150க்கும் மேற்பட்ட பணிமனை, கட்சி அலுவலகம், சந்திப்பு இடம், காலி இட பந்தல் என அமைத்து பிரசாரம் செய்தனர்.
வாக்காளர்களுக்கு, தினம் ஒரு பரிசுப்பொருள் வழங்கினர். தாரை, தப்பட்டை, மேளம் இசைத்தனர். கொடி, தோரணம் கட்டினர். பெண்களை வரிசையில் நிற்க வைத்து, பூக்களை துாவி ஆரத்தி எடுத்தனர்.
வாக்காளர்களை பணிமனை, பெரிய வீடு, கட்டடங்களுக்கு அழைத்து சென்று பிரியாணி, பணம் வழங்கினர்.
குறிப்பாக, எதிர்க்கட்சியினர் பிரசாரத்துக்கு கூட்டம் சேர விடாமல், வாக்காளர்களை கட்டடங்களில் அடைத்து வைத்தனர்.
![]()
|
இதுபோன்ற விதிமீறல் குறித்து, தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு தந்த அ.தி.மு.க.,வினர், நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.
மேலும், இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் விதிமீறல் குறித்து, தமிழக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை கேட்டுள்ளது.
எனவே, 'இடைத்தேர்தல் நிறுத்தப்படலாம்' என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் உஷாரான தி.மு.க.,வினர் அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:
தேர்தல் அறிவித்தவுடன் பல கோடி ரூபாயை கூட்டணி கட்சி வேட்பாளருக்காக, தி.மு.க., செலவிட்டுள்ளது.
எனவே, இடைத்தேர்தலை நிறுத்தும் அறிவிப்பு வரும் வகையில், அமர்க்களமாக பணி செய்ய வேண்டாம். அடக்கி வாசிக்கும்படி, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், பல அலுவலகங்கள், பொது இடங்களில் அமைக்கப்பட்ட பந்தல்கள் அகற்றப்பட்டன. மாலை நேரத்தில் கூட்டமாக அமர போடப்பட்ட நாற்காலிகளை திரும்ப ஒப்படைத்து விட்டோம்.
உணவு, விருந்து, பரிசு பொருட்கள் வழங்குவதை மாற்றி, பணமாக மட்டும் வழங்கி வருகிறோம். மேள, தாளம், தாரை, தப்பட்டைகளை தவிர்த்து விட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.