அறிவியல் ஆயிரம்
ரத்தத்தின் கலவை
வெள்ளை அணு, சிவப்பணுக்கள் பிளாஸ்மா திரவத்தில் கலந்த கலவை தான் ரத்தம். 100 மி.லி. ரத்தத்தில் 50% பிளாஸ்மா, 40% ரத்த சிவப்பணு, 10% மற்ற அணுக்கள் இருக்கும். எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடத்தைச் சுற்றி உள்ள எலும்பு மஜ்ஜையில் ரத்த வெள்ளை, சிவப்பணு, பிளேட்லட் உற்பத்தியாகின்றன. சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபின் தான் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கின்றன. ரத்தநாளங்களில் ரத்தம் பாயும் போது வெள்ளை, சிவப்பு அணுக்கள் ஒன்றுடன் ஒன்று, ரத்தநாள சுவர்களிலும் மோதும். நீர்மத்தில் மிதந்து செல்லும் செல்கள் இவ்வாறு மோதுவதால் உடைந்து விடாது.
தகவல் சுரங்கம்
உலக சமூகநீதி தினம்
உலகில் மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உணவு, பொருளாதாரம், பாலினம், மொழி உட்பட எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஒரே சமூகமாக மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப். 20ல் உலக சமூகநீதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2007ல் இத்தினம் உருவாக்கப்பட்டது. 'தடைகளைத் தாண்டி சமூக நீதிக்கான வாய்ப்புகளை வழங்குதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சமூக வளர்ச்சிக்கு 'சமூக நீதி' மிக அவசியம். மக்களிடையே வறுமை, வேலைவாய்ப்பின்மையை போக்கவும் இத்தினம் வலியுறுத்துகிறது.