காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, பொன்னேரிக்கரை அருகே உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் அம்மன் கோவில் அமைந்துள்ள சாலையில், மின் விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
குடியிருப்பையொட்டி பொன்னேரி ஏரி உள்ளதால், ஏரியில் தஞ்சமடைந்துள்ள பாம்புகள், இரவு நேரத்தில் இரை தேடி இப்பகுதியில் உலா வருகின்றன.
இதனால், இரவு நேரத்தில் பள்ளி, கல்லுாரி சென்று வீடு திரும்பும் மாணவியரும், பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களும் இருள் சூழ்ந்த பகுதியில் விஷ ஜந்துக்களுக்கு பயந்து அச்சத்துடன் செல்லும் சூழல் உள்ளது.
எனவே, அம்மன் கோவில் பகுதியில் புதிதாக மின் கம்பங்கள் அமைத்து தெரு மின் விளக்கு வசதி ஏற்படுத்த கோனேரிகுப்பம் ஊராட்சியும், மின் வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர் குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.