கோவை:முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், கல்லுாரி மாணவர்கள் பிரிவு போட்டிகள் நேற்று துவங்கின.
முதலமைச்சர் கோப்பைக்கான (சி.எம்., டிராபி) விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு என பல்வேறு கட்டங்களாக, கோவையில் நடக்கின்றன.
கோவை மாவட்டத்தில், முதல்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் கடந்த வாரம் நடத்தப்பட்டன. இரண்டாம் கட்டமாக கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், நேற்று முதல் பல்வேறு கல்லுாரி மைதானங்களில் நடக்கின்றன.
கபடி
கற்பகம் பல்கலை மைதானத்தில் நடந்த மாணவர்களுக்கான கபடிப் போட்டியில், 38 கல்லுாரி அணிகள் பங்கேற்று போட்டியிட்டன. முதல் போட்டியில் ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி 42 - 10 என்ற புள்ளிக்கணக்கில் யுனைடெட் கல்லுாரி அணியையும்; நேரு கல்லுாரி அணி, 35 - 31 என்ற புள்ளிக்கணக்கில் கதிர் கல்லுாரி அணியையும் வீழ்த்தின.
வாலிபால்
கற்பகம் பல்கலையில் நடந்த வாலிபால் போட்டியில், 27 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இதில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் ஈஷா இன்ஜி., கல்லுாரி அணியையும், கற்பகம் பல்கலை அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், அரசு சட்டக்கல்லுாரி அணியையும், என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் சக்தி இன்ஜி.,கல்லுாரி அணியையும் வீழ்த்தின.
கூடைப்பந்து
பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடந்த கூடைப்பந்து போட்டியில், 21 அணிகள் போட்டியிட்டன.
முதல் போட்டியில், ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி அணி, 73 - 24 என்ற புள்ளிக்கணக்கில் இந்துஸ்தான் கல்லுாரி அணியையும், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 40 - 20 என்ற புள்ளிக்கணக்கில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியையும், காருண்யா பல்கலை அணி, 36 - 25 என்ற புள்ளிக்கணக்கில், கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி அணியையும் வீழ்த்தின.
டேபிள் டென்னிஸ்
கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதன் ஒற்றையர் பிரிவில், 71 பள்ளி மாணவர்கள் மற்றும் 39 கல்லுாரி மாணவர்களும், இரட்டையர் பிரிவில், 14 பள்ளி மாணவர்கள் மற்றும் 13 கல்லுாரி மாணவர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.