உத்திரமேரூர் : சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், உடற்பயிற்சி நேரங்களில், மாணவர்கள் சாலையில் உலா வரும் நிலை உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது.
இப்பள்ளி, மாணவ - மாணவியர் பயன்படுத்தும் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதி, அப்பகுதியில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் எனவும், மற்றொரு பகுதி, தனி நபருக்கு சொந்தமானதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுசுவர் ஏற்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இச்சிக்கலால் பள்ளி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மைதானத்தை விளையாட்டு நேரங்களில் பயன்படுத்தும் பள்ளி மாணவ - மாணவியர் சில சமயங்களில் ஆசிரியர் அனுமதியின்றி சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இந்த மைதானத்தில் அமர்ந்து, குடிமகன்கள் மது அருந்துகின்றனர்.
எனவே, சாலவாக்கம்அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, சொந்தமாக விளையாட்டு மைதானம் மற்றும் சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.