திருவாலங்காடு : பூண்டி ஒன்றியம், எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவைக்காக ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூன்று ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இருந்தபோதும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
தற்போது இதன் நான்கு துாண்களும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, தொட்டியின் அடிபாகம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியின் வெளிப்புறத்தில் இருந்து சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது உதிர்வதால், குழந்தைகள் பள்ளிக்கு சென்று வரும் போது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர்.
இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற, ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.