பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடந்த, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமில், புதிதாக 65 பேருக்கு மருத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், பாலக்காடு ரோடு, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மைய (பொறுப்பு) ஆசிரியர் பயிற்றுநர் ஸ்வப்ணா முன்னிலை வகித்தார். நகராட்சித் தலைவர் சியாமளா தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 17 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. முகாமில், 437 பேர் பங்கேற்ற நிலையில், புதிதாக 65 பேருக்கு மருத்துவ சான்றிதழ், அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மேலும், அறுவை சிகிச்சைக்கு மாணவர்களை தேர்வு செய்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு செய்தல், அடையாள அட்டையை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன. வடக்கு வட்டார கல்வி அலுவலர்கள் சார்மிளா, யோகேஸ்வரி, பள்ளித் தலைமையாசிரியர் முருகேசன், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.