துார்வார வேண்டும்
உடுமலை --- தாராபுரம் ரோட்டில் மழைநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகால் துார்வாரப்படாமல் உள்ளதால், செடிகள், புதர் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, நகராட்சியினர் மழைநீர் வடிகாலை துார்வார வேண்டும்.
- கருப்பசாமி, உடுமலை.
காய்ந்து வரும் செடிகள்
உடுமலை - பழநி ரோட்டில் சென்டர் மீடியனில் மாசுக்களை கட்டுப்படுத்த செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு முறையாக தண்ணீர் ஊற்றாததால், காய்ந்து வருகின்றன. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன்குமார், உடுமலை.
ரோட்டில் ஜல்லிக்கற்கள்
உடுமலை, சரவண வீதியில் கட்டடப்பணிகளுக்காக ஜல்லிகற்கள் ரோட்டை ஆக்கிரமித்து கொட்டப்பட்டுள்ளன. வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது, ஜல்லிகற்களால் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றனர். இக்கற்களை அகற்ற வேண்டும்.
- மஞ்சுளா, உடுமலை.
சுகாதார சீர்கேடு
உடுமலையிலிருந்து, பள்ளபாளையம் செல்லும் ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவ்வழியாக கடந்து செல்வோர், துர்நாற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, குப்பை கழிவுகளை ஊராட்சியினர் அகற்ற வேண்டும்.
- சின்னசாமி, பள்ளபாளையம்.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் வாகனங்கள், தனியார் பஸ்கள் ரோட்டை மறித்து நிறுத்தப்படுகின்றன. ஒருவழிப்பாதையாக இருப்பதால், மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.
- பார்த்திபன், உடுமலை.
திறந்தவெளி கழிப்பிடம்
உடுமலை, மினி மார்க்கெட் பகுதியில் ரேஷன் கடை அருகே உள்ள பொதுமக்களுக்கான பாதை சிறுநீர் கழிக்கும் இடமாக மாறி வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது. நோய் பரவவும் வாய்ப்புள்ளது.
- வேலுமணி, உடுமலை.
விபத்து அபாயம்
உடுமலை, தளி ரோடு மேம்பாலத்தின் கீழ் இருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், நகராட்சி அலுவலக ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் ரோட்டை கடக்கும்போது விபத்து அபாயம் ஏற்படுகிறது. வாகனங்கள் தாறுமாறாக செல்வதை கட்டுப்படுத்த வேண்டும்.
- மாதவி, உடுமலை.
இருளில் அக்ரஹாரவீதி
உடுமலை, பழைய அக்ரஹார வீதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வெளியில் சென்று வருவதற்கு அச்சத்துடன் உள்ளனர். திருட்டு, வழிப்பறி சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காயத்ரி, உடுமலை.
நடைபாதையில் பார்க்கிங்
உடுமலை, வ.உ.சி., வீதியில் பாதசாரிகளுக்கென போடப்பட்ட நடைபாதையில், வாகனங்களை நிறுத்தி, பார்க்கிங் பகுதியாக மாற்றியுள்ளனர். ரோட்டில் வாகனங்கள் அதிகம் செல்வதால், நடைபாதையையும் பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
- செல்வி, உடுமலை.
பிளக்ஸ் போர்டால் இடையூறு
உடுமலையில் பஸ் ஸ்டாண்ட், கல்பனா ரோடு, கச்சேரி வீதி, தளி ரோடு, ரவுண்டானா பகுதிகளில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றால், வாகன ஓட்டுனர்களின் கவனம் சிதறுவதோடு, விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விதிமீறி அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.
- சுந்தரம், உடுமலை.