வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத்தின் கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவ குற்றவாளிகள், 11 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுவதை வலியுறுத்தப் போவதாக, குஜராத் அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கிருந்து, உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணித்த சபர்மதி ரயிலின் ஒரு பெட்டிக்கு, கோத்ரா அருகே சிலர் தீ வைத்தனர். கடந்த 2002ல் நடந்த இந்த சம்பவத்தில், ரயில் பெட்டியில் இருந்த 59 கரசேவகர்கள் உடல் கருகி இறந்தனர். இதைத் தொடர்ந்து, குஜராத்தில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சிலர் ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்த்திவாலா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
![]()
|
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், 31 பேர் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதில், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு துாக்கு தண்டனையும் விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், 11 பேரின் துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உள்ளது. இந்த வழக்கில், இதுவரை இரண்டு பேர் ஜாமினில் உள்ளனர். மற்றவர்களும் ஜாமின் கேட்டுள்ளனர். இவர்கள் ரயில் பெட்டிகள் மீது கற்களை வீசியதாக கூறுகின்றனர்.
ஆனால், ரயில் பெட்டிக்கு தீ வைத்து, அதை வெளியில் இருந்து பூட்டி, தப்பிக்காமல் இருக்கவே கற்களை வீசியுள்ளனர். இது, அரிதிலும் அரிதான வழக்கு. இந்தக் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. இந்த வழக்கில், 11 பேருக்கு விதிக்கப்பட்டு இருந்த துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட உள்ளது. இவர்களுக்கு துாக்கு தண்டனை விதிக்க வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் எத்தனை பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, திருத்தப்பட்ட தண்டனை, எத்தனை ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் உள்ளிட்ட விபரங்களை அளிக்குமாறு அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.