பிரெஞ்சு ஆட்சியர்களுக்குட்பட்டு இருந்த புதுச்சேரியில் ஏராளமான பாரம்பரிய கட்டடங்கள் உள்ளன. இவற்றை காண வெளியூர், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
புதுச்சேரியை யுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் இடம் பெற செய்யும் முயற்சியாக, அண்மையில் 114 பாரம்பரிய கட்டங்கள் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டது.
இதில் அதிகபட்சமாக 60 ஆசிரம கட்டடங்கள், 36 அரசு கட்டடங்கள், தலா 9 பிரெஞ்சு கட்டடங்கள் மற்றும் சர்ச்சுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த 114 பாரம்பரிய கட்டடங்கள், கிரேடு-1, கிரேடு-2ஏ, கிரேடு-2பி,கிரேடு-3 என மூன்று வகையில் பிரிக்கப்பட்டுள்ளன.
கிரேடு-1 பட்டியலில் புதுச்சேரி அரசின் சின்னமான ஆயி மண்டபம், பழைய கலங்கரை விளக்கம், ராஜ்நிவாஸ், அரவிந்தர் ஆசிரம், குபேர் மார்க்கெட் கடிகாரம், டூப்ளே சிலை, காந்தி திடல் உள்பட 10 பாரம்பரிய இடங்கள் இடம் பெற்றுள்ளன. இவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததால் இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
புதுச்சேரியை யுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் இடம் பெற செய்யும் முயற்சியில் அடுத்தகட்டமாக தனியாரிடம் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் குறித்தும் சர்வே எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான முயற்சியை புதுச்சேரி நகர அமைப்பு குழுமம், இன்டெக் அமைப்புடன் இணைந்து துவக்கியுள்ளது. இதற்கான வரைவு திட்டமும் ரெடியாகி வருகின்றது.
இந்த பட்டியலில் பழமை வாய்ந்த 120 தனியார் கட்டடங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்டடங்களில் நகர அமைப்பு குழும அதிகாரிகள்விரைவில் ஆய்வு செய்து, பட்டியலை இறுதி செய்ய உள்ளனர்.
பாரம்பரிய பட்டியலில் தனியார் கட்டடங்களை இடம் பெற அரசு முயற்சி செய்தாலும், அதற்கு இடத்தின் உரிமையாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை.
எனவே இடத்தின் உரிமையாளர்களை கவர சலுகைகள் தருவது குறித்து பல்வேறு பரிந்துரைகளை இன்டெக் பரிந்துரைத்துள்ளது.
குறிப்பாக பாரம்பரிய பட்டியலில் இணையும் தனியார் கட்டட உரிமையாளர்களுக்கு சொத்து வரி, நகராட்சி வரி, குப்பை வரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகளில் சலுகைகள் தரலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அரசு இறுதி முடிவு எடுக்க உள்ளது.
உலகப் பாரம்பரியச் சின்னமாக புதுச்சேரி இடமாக அறிவிக்கப்பட்டதால், யுனெஸ்கோ அறிவிக்கும் பாரம்பரிய இடங்கள் 'மிகவும் விரும்பத்தக்க இடம்' என்ற அந்தஸ்தைப் பெறும். இதனால், அந்தப் பகுதியில் சுற்றுலா பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடதக்கது.
புதுச்சேரியில் கடந்த 1995ம் ஆண்டு இன்டெக் கணக்கெடுத்தபோது 1807 பாரம்பரிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டன. இருப்பினும் இது 2005ம் ஆண்டு கணக்கெடுத்தபோது 1,173 ஆக குறைந்திருந்தது. தொடர்ந்து 2008 ம் ஆண்டு மீண்டும் சர்வே செய்து, சில பாரம்பரிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டதால், பாரம்பரிய கட்டடங்களின் எண்ணிக்கை 1,184 ஆக உயர்ந்தது.கடந்த 2010ம் ஆண்டு மத்திய ஊரக அமைச்சகம் வகுத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மீண்டும் பாரம்பரிய கட்டடங்களை பகுத்தாய்வு செய்தபோது, 980 கட்டடங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டு தேறியது. கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு இன்டாக் சர்வே செய்தபோது, இவற்றில் 488 பாரம்பரிய கட்டடங்கள் மட்டுமே தேறியது.இதில் முதற்கட்டமாக 114 பாரம்பரிய கட்டடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 120 தனியார் பாரம்பரிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு, சர்வே செய்யப்பட்டு வருகிறது.