கள்ளக்குறிச்சி, :கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 270 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதில் முதியோர், விதவை ஆதரவற்றோர் உதவி தொகை, வீட்டு மனைப்பட்டா, சாலை வசதி, பட்டா மாற்றம், தொழில் துவங்க கடனுதவி, ஏரி குளம் துார் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு திட்டம், வேளாண் உழவர் நலத்துறை திட்டம், காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட மொத்தம் 270 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில் உளுந்துார் பேட்டை அடுத்த நெய்வனை கிராமத்தில் இந்து ஆதியன்(பூம்பூம் மாட்டுக்காரன்) இனத்தை சேர்ந்த 2 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, அரசு பணியின் போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
அதேபோல் கரடிசித்துார் கிராமத்தில் 4 பேருக்கு வீட்டு மனைபட்டா, நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர் 7 பேருக்கு நலவாரிய அட்டை, கட்டுரை, ஓவியம், கவிதை உள்ளிட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற 10 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் டிஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெயக்குமார், நகராட்சி கமிஷனர் குமரன், தாட்கோ மேலாளர் ஆனந்தகோகன் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.