சென்னை : விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 2 கோடி ரூபாய் மதிப்பிலான, 4 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான துபாயில் இருந்து, 'எமிரேட்ஸ்' விமானம், நேற்று முன்தினம் சென்னை வந்தது. அந்த விமானத்தில் இருந்து, சந்தேகப்படும்படியாக வந்த இருவரை, சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அட்டைப் பெட்டிக்குள் மறைத்து, 43.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 860 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள், தங்கத்தை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
மேலும், இலங்கையில் இருந்து வந்த 'ஏர் இந்தியா' விமானத்தில் வந்த மூன்று பேர், 51.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,020 கிராம் தங்கம்; துபாயில் இருந்து வந்த மூவர், 'டிராலி பேக்' மற்றும் உடம்பில் மறைத்து, 1.07 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,148 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம், 2.01 கோடி ரூபாய் மதிப்பிலான, 4.02 கிலோ தங்கத்தை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.