விழுப்புரம் : அரசு வேலை வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
செஞ்சி அடுத்த மொடையூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 35; மாற்றுத் திறனாளி. இவர், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கிருந்த கூடுதல் கலெக்டர் கார் முன் பூச்சி மருந்து பாட்டிலுடன் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரைப் பிடித்து மருந்து பாட்டிலை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கூட்டுறவுத்துறை, மருத்துவ உதவியாளர், இரவு காவலர், கிராம உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நேர்காணலில் பலமுறை கலந்து கொண்டேன். ஆனாலும், வேலை வழங்கவில்லை. இது குறித்து கலெக்டருக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசாரின் அறிவுரையையேற்று, கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.