சென்னை: பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளில் ஒருவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பா.ம.க., பிரமுகர். இவர், அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். ஹிந்து மதத்தின் மீது தீவிர பற்றுக் கொண்டிருந்த இவர், திருபுவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த மத மாற்றத்தை தட்டிக் கேட்டு வந்தார். இதற்கான வீடியோ பரவியது.
இந்நிலையில், 2019 பிப்., 5ல், மர்ம நபர்களால் ராமலிங்கம் கொடூரமாக கொல்லப்பட்டார். திருவிடைமருதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது, திருவிடைமருதுார், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 18 பேர் சதி திட்டம் தீட்டி, ராமலிங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.
இதன் பின்னணியில், பயங்கரவாதிகளின் தொடர்பு இருப்பதால், தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து, திருபுவனத்தைச் சேர்ந்த சர்புதீன், 65 உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சர்புதீன், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் நகர செயலராக பணியாற்றி வந்தார்.
சென்னை, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர், கிட்னி பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த சர்புதீன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. ராமலிங்கம் கொலை வழக்கில், சர்புதீன் நான்காவது குற்றவாளியாக கைதானார்.