பெங்களூரு-கன்னட திரையுலகின், பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பகவான், நேற்று காலமானார்.
கன்னடத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், இயக்குனர் பகவான், 90.
இவரது இயக்கத்தில், ராஜ்குமார் நடிப்பில் திரைக்கு வந்த, கஸ்துாரி நிவாசா, எரடு கனசு உட்பட பல வெள்ளி விழா படங்களை, தன் நண்பர் துரைராஜுடன் சேர்ந்து இயக்கினார். தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்ட பகவான்,மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை 6:00 மணிக்கு காலமானார். இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பகவானின் விருப்பப்படி, அவரது கண்கள் நாராயணா நேத்ராலயாவுக்கு தானம் செய்யப்பட்டது.
பெங்களூரின், சஹகார நகரில் உள்ள அவரது இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
பகவான் மறைவுக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.