புதுடில்லி: இந்தியா -சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறையை இன்று(பிப்.,21) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார்.

எளிதாக பணம் பெறுவதற்கு, செலுத்துவதற்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. முறை வெற்றிகரமான பணபரிவர்த்தனை சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இதனை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பு கண்காணித்து வருகிறது.

பல்வேறு வங்கி கணக்குகளை ஒரே செயலி மூலம் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த இயலுமென்பதால், இளைய தலைமுறையினரிடம் யு.பி.ஐ. முறை வெற்றிகரமாக சென்று சேர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியா -சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறை திட்டம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை இன்று (பிப்.,21) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார். இதில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்டோர் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
டிஜிட்டல் இந்தியா திட்டம் மக்களின் வாழ்க்கையையும், வர்த்தகத்தையும் எளிதாக்கியுள்ளது. தொழில்நுட்பம் இன்று உலகை இணைத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் எளிதாக வணிகம் செய்ய முடியும். நிதி சார்ந்த நிறுவனங்களும் ஒரு உந்துதலைப் பெற்றுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை நிதி சார்ந்த நிறுவனங்களுக்கு வளர்ச்சியை பெற்று தந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், புதுமை மற்றும் நவீனமயமாக்கலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்துள்ளது. இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது இரு நாட்டு குடிமக்களுக்கு கிடைத்த பரிசு. இரு நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள்.
இது குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பயனளிக்கும். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் பல வழிகளில் நம்மை இணைக்கிறது.
இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனையால், கோவிட் காலத்தில், கோடிக்கணக்கான மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்ய முடிந்தது. டிஜிட்டல் இந்தியா திட்டம், முன்னெப்போதும் இல்லாத அளவு வளர்ச்சி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.