திருப்பூர்: மனைவியுடன் கள்ள தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, பீகார் வாலிபரை அரிவாளால் வெட்டி கொன்ற ஜார்கண்ட் மாநில தொழிலாளியை போலீசார் தேடுகின்றனர்.
பீகாரை சேர்ந்தவர் பவன் யாதவ், 27. திருப்பூர், நெசவாளர் காலனியில் தங்கி பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, அதே காம்பவுண்டில் குடும்பத்துடன் வசித்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திரதாரி, 50 என்பவர், திடீரென பவன்யாதவ் வீட்டுக்கு சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பினார்.
படுகாயமடைந்த பவன் யாதவை அருகில் இருந்தோர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். உபேந்திரதாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில்,'கொல்லப்பட்ட பவன்யாதவுக்கு ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது மனைவி பீகாரில் இருந்து வருகிறார். தலைமறைவான உபேந்திரதாரிக்கு, சுமித்ராதேவி, 43 என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். சந்தேக புத்தி காரணமாக அவ்வப்போது மனைவியுடன் இவர் தகராறு செய்வது வழக்கம். சமீபகாலமாக, பவன்யாதவுடன், மனைவிக்கு தவறான பழக்கம் இருப்பதாக வீட்டில் தகராறு செய்து வந்தார்.
'இதுகுறித்து பவன்யாதவுக்கு எதுவும் தெரியாது. தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது, வீட்டுக்கு திரும்பிய பவன்யாதவுடன், உபேந்திரதாரி தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அவர் எதற்காக வெட்டப்பட்டார் என்பது கூட, அவருக்கு தெரியாது. கணவரின் சந்தேக புத்தியால், பரிதாபமாக வாலிபரின் உயிர் பறிபோனது' என்றனர்.