சென்னை: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய, இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் இருந்து, ஆறு மீனவர்கள், நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கடந்த, 15ம் தேதி தோப்புத்துறைக்கு கிழக்கே, அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையை சேர்ந்த, 10 பேர், மூன்று படகுகளில் வந்துள்ளனர்.
அவர்கள், தமிழக மீனவர்களின் படகை சூழ்ந்து, தமிழக மீனவர்களை இரும்பு கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில், தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டது.
தமிழக மீனவர்களின் வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ்., கருவி, பேட்டரி, 200 கிலோ மீன் என, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். காயமடைந்த மீனவர்கள், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இலங்கை நட்டை சேர்ந்தவர்களால், அடிக்கடி நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள், மிகவும் வேதனை அளிக்கின்றன.
மத்திய அரசு இதை கவனத்தில் வைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், இலங்கை நாட்டினரால் நடத்தப்படும், இத்தகைய தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், தாக்குதல் நடத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும், இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
நிவாரணம்
இலங்கை நாட்டினர் தாக்கியதில், பலத்த காயமடைந்த முருகன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வழங்க, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.