ஷில்லாங்: கோவாவை போல, மேகாலயாவிலும் பா.ஜ., வெற்றிக்கு உதவுவதற்காக திரிணமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
மேகாலயாவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்காக கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் எம்.பி., ராகுல் மேகாலயாவின் ஷில்லாங் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: அதானி உடனான உறவு குறித்து பிரதமரிடம் கேட்டேன். அதானியின் விமானத்தில் அதானியும் பிரதமரும் அமர்ந்திருக்கும் படத்தையும் காண்பித்தேன். அந்த விமானத்தில் பிரதமர் மோடி தனது சொந்த வீடு போல் ரிலாக்சாக ஓய்வெடுக்கிறார். இது தொடர்பாகன எனது எந்த கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை.

மாறாக, என்னுடைய பெயரில் ஏன் நேரு இல்லாமல் காந்தி இருக்கிறது என பிரதமர் கேட்கிறார். நான் பார்லி.,யில் உரையாற்றியதை பார்த்திருப்பீர்கள். பிரதமர் மோடி பேசிய பிறகு அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவரின் உரையை மட்டுமே காண்பித்தனர், எனது உரையை பார்க்கமுடியவில்லை. பிரதமர் மோடியுடன் தொடர்புள்ள 2 - 3 பெரிய தொழிலதிபர்களால் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுவதால் எனது பேச்சு ஊடகங்களில் வெளியாகவில்லை. ஊடகங்களில் கூட எங்களால் எதையும் வெளிப்படுத்த முடிவதில்லை.
திரிணமுல் காங்.,
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்கும். மேற்குவங்கத்தில் நடந்த வன்முறையும் தெரிந்திருக்கும். அக்கட்சியின் பாரம்பரியத்தை அறிந்திருப்பீர்கள். அவர்கள் பா.ஜ., வெற்றிப்பெற உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பெருமளவு பணத்தை செலவு செய்து கோவாவில் போட்டியிட்டனர். அதேபோல மேகாலயாவிலும் திரிணமுல் காங்கிரசின் எண்ணம் பா.ஜ., ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான். இவ்வாறு அவர் பேசினார்.