மேலூர்:மதுரை மாவட்டம் மேலுாரில் தந்தை, தாய் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறை கவனித்த பயிற்சி டாக்டரான மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த, ஏட்டு தந்தையும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலுார் அருகே சின்னகற்பூரம்பட்டி அழகன் 57, மேலவளவு போலீசில் ஏட்டாக பணிபுரிந்தார். ஜன., 18 முதல் விடுமுறையில் இருந்தார். தற்போது, மேலுார் காந்தி நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்தார்.
இவருக்கு, மனைவி நாச்சம்மாள், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி நத்தத்தில் கணவருடன் வசிக்கிறார். மகன் தமிழ்வாணன் 27, மருத்துவம் படித்து தனியார் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்தார்.
நேற்று முன் தினம் இரவு, தந்தை - தாய் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. மனைவியை அழகன் தாக்கினார். இதைப் பார்த்து மனமுடைந்த தமிழ்வாணன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து பெற்றோர் கதவைத் தட்டியும் மகன் திறக்காததால் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் துாக்கில் தொங்கிய மகனை மீட்டு மேலுார் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதைக் கேள்விப்பட்ட அழகன் பாத்ரூமில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து அழகன் உடலை மீட்டனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.